ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்
கலைஞர் உரை:
ஒருவருக்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதனால், அந்த ஒழுக்கமே உயிரை விட மேலானதாகப் போற்றப்படுகிறது.
மு.வ உரை:
ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதனால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒழுக்கம், அதை உடையவர்க்குச் சிறப்பைத் தருவதால் உயிரினைக் காட்டிலும் மேலானதாக அதைக் காக்க வேண்டும்.
பரிமேலழகர் உரை:
(அஃதாவது, தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் ஓதப்பட்ட ஒழுக்கத்தினையுடையர் ஆதல். இது, மெயம் முதலிய அடங்கினார்க்கு அல்லது முடியாது ஆகலின், அடக்கம் உடைமையின் பின் வைக்கப்பட்டது)
ஒழுக்கம் விழுப்பம் தரலான் - ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பினைத் தருதலான், ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் - அவ்வொழுக்கம் உயினும் பாத்காக்கப்படும், (உயர்ந்தார்க்கும் இழிந்தார்க்கும் ஓப்ப விழுப்பம் தருதலின், பொதுப்படக் கூறினார். சுட்டு வருவிக்கப்பட்டது. அதனால், அங்ஙனம் விழுப்பந் தருவதாயது ஒழுக்கம் என்பது பெற்றதாம். “உயிர் எல்லாப் பொருளினும் சிறந்தது ஆயினும், ஒழுக்கம் போல விழுப்பம் தாராமையின் உயிரினும் ஓம்பப்படும்” என்றார்.).
மணக்குடவர் உரை:
ஒழுக்கமுடைமை சீர்மையைத் தருதலானே, அவ்வொழுக்கத்தைத் தனது உயிரைக் காட்டினும் மிகக் காக்க வேண்டும் இஃது ஒழுக்கம் மேற்கூறிய நன்மையல்லாந் தருமாதலின், அதனைத் தப்பாமற் செய்யவேண்டும் என்று வலியுறுத்துகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக